என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாரிகள் வேலை நிறுத்தம்"
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், குடவாசல், ஆலங்குடி உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் சுமார் 3200 லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கும் ஏற்றிச் சென்று வருகின்றன.
இந்த நடைமுறையை மாற்றி அரவை பணிகளுக்காக ஏற்றப்படும் லோடுகளை மில் உரிமையாளர்களே தங்களது லாரிகள் மூலம் ஏற்றிச் செல்ல நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்கும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு போட்டும் மில் உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரவை பணிகளுக்காக லோடுகளை மில் உரிமையாளர்கள் ஏற்றிக் கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு, மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற நடைமுறையை கண்டித்து, இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
இதனால் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrikes
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 8-வது நாளாக லாரிகள் உரிமையாளர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு லாரி சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரிகள் பென்னாகரம் மெயின்ரோட்டில் வரிசையாக நிறுத்தியுள்ளனர். மேலும் சில லாரிகளை பெட்ரோல் பங்குகளிலும் நிறுத்தி உள்ளனர்.
போராட்டத்தை மீறி லாரிகளை இயக்குபவர்களை சங்க உறுப்பினர்கள் வழிமறித்து தங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டு கொண்டனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வழியாக வந்த 4 லாரிகள் மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதில் ஒரு லாரி டிரைவருக்கு காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். லாரிகள் மீது கல்வீசியவர்களை போலீசார் தேடிவந்தனர்.
இந்த கல்வீச்சு சம்பவத்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளாத சங்கத்தினர் தருமபுரி வழியாக லாரிகளை இயக்குவதற்கு தயங்கி வந்தனர்.
சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையைச் சேர்ந்தவர் செல்லபிள்ளை (வயது 49). இவர் நேற்று ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ராணிமூக்கனூருக்கு வந்தார். அப்போது அங்கு ஜல்லிகற்களை அங்கு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு லாரியை எடுத்து கொண்டு சென்றார்.
லாரியில் டீசல் குறைவாக இருந்ததால் கடத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றார். திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் லாரியின் முன்பக்கமாக வந்து வழிமறித்தனர். அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கற்களை கொண்டு லாரியின் மீது விசினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.
இதுகுறித்து செல்ல பிள்ளை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #lorrystrike
ஈரோடு:
பெட்ரோல் டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை இதனால் சுமார் ரூ. 350 கோடி வரை வர்த்தகம் முடங்கியுள்ளது. புடவை துணிமணிகள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் லாரி புக்கிங் ஆபீஸ் மற்றும் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் வருகிறது. குறிப்பாக ஜவுளிகள் மஞ்சள் எண்ணெய் வித்துக்கள் காய்கறிகள் போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தையும் இணைந்துள்ளது.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வருவார்கள் குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் ,கேரளா, மேற்கு வங்காளம் ,கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்று நடந்த மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாட்டுச்சந்தை களை இழந்து காணப்பட்டது. வியாபாரமும் பாதிக்கு பாதியாக குறைந்தது.
இன்று 200 பசு மாடுகளும் 100 எருமை மாடுகளும் 200 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்கு வந்தன. அவை 16 ஆயிரம் முதல் 34 ஆயி ரம் வரை விற்பனையானது.
இது குறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது.-
கடந்த 2 வாரமாகவே மழை காரணமாக வெளி மாநில வியாபாரிகள் அதிகம் வரவில்லை. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக. இன்று சந்தைக்கு குஜராத், கர்நாடகா, குஜராத், மேற்குவங்காளம் வியாபாரிகள் யாரும் வரவில்லை.
ரூ.3 கோடி வரை மாட்டு சந்தையில் விற்பனை நடக்கும் .ஆனால் இன்று ரூ.1 கோடிக்கு மட்டுமே மாடுகள் விற்பனை ஆனது ரூ.2 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு பருத்தி விற்பனை அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது இதனால் பருத்திக்கு புகழ் பெற்று வருகிறது விற்பனை கூட்டம்.
இந்த வருட பருத்தி ஏலம் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் செய்வருவதால் சந்தையில் உள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகிறது.
நேற்று விற்பனை கூடத்தில் நடைபெற இருந்த பருத்தி ஏலம் நடைபெறவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது கடந்த 10 நாட்களாக மிகவும் சிரமமப்பட்டு பருத்தி எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம் சுமார் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்படும் இந்நிலையில் லாரி ஸ்டிரைக் கால் இந்த வார விற்பனை நிறுத்தப்பட்டது வாரா வாரம் விற்பனையை வைத்துதான் விவசாய கடன் மற்றும் ஆட்கள் கூலி ஆகியவற்றை கொடுத்து வந்தோம் இந்தவாரம் என்ன செய்வது என்றும் அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறினர்.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம் தினமும் 600 தீப்பெட்டிகள் கொண்ட 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடியாகும்.
கர்நாடகா, மகராஷ்டிரா, அசாம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜம்மு உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக மழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. தீப்பெட்டிகளுக்கான ஆர்டர்களும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் டீசல் விலை உயர்வு கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேலும், தீப்பெட்டி பண்டல்கள் தொழிற்சாலைகளிலும், லாரி ஷெட்டுகளிலும் சுமார் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி மதிப்பிலான தேங்கி கிடக்கின்றன.
இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடர்ந்து வேலை நடத்த முடியாத நிலை உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாகவே பகுதி இயந்திர தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதமாக குறைக்க, மாநில அரசு கேட்டுக்கொண்டும் மத்திய அரசு முன்வரவில்லை.
இந்நிலையில், இயற்கை சீற்றங்கள், லாரிகள் வேலை நிறுத்தம், கூடுதல் ஜி.எஸ்.டி. போன்ற காரணங்களால் தீப்பெட்டி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. தீப்பெட்டி மூலப்பொருள் விற்பனையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாமலும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த 2 வாரமாக சம்பளம் வழங்க முடியாமலும் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் தனியார் நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் பெற முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும், தீப்பெட்டி சார்பு தொழிலான வெள்ளை குச்சி தயாரித்தல், ஸ்கிரீன் கோரிங், பிரிண்டிங், அட்டை, குளோரேட், சல்பர், மெழுகு போன்ற மூலப்பொருட்கள் விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த ஜூன் மாதமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நீண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள தனியார் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் லாரி வேலை நிறுத்தம் குறித்தும், தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அதுல்ஜெயின், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ராஜவேல், செயலாளர் கதிரவன், துணை தலைவர் ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். #lorrystrike
இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக லாரிகள் எதுவும் ஓடவில்லை. நெல்லை காய்கறி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. வெளியூர் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. கட்டிட பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு சரக்கு ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சென்றன. அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், அந்த லாரிகள் மீது கல்வீசி தாக்கி விட்டு டிரைவரை எச்சரித்து விட்டு ஓடிவிட்டனர். இதில் 2 லாரிகளின் கண்ணாடிகளும் உடைந்தன.
இது தொடர்பாக லாரிகளின் டிரைவர்கள் தென்காசி வல்லத்தை சேர்ந்த மோகன், செல்வம் ஆகியோர் செங்கோட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய கும்பலை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் லாரிகள் ஸ்டிரைக்கை தீவிரபடுத்தவும், டேங்கர் லாரிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளையும் நிறுத்துவது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #lorrystrike
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களில் குறைந்த அளவு வாகனங்கள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காய்கறிகள் தேக்கமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றிச் சென்ற லாரி கிளீனர் கல் வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்ததால் லாரி டிரைவர்களிடையே மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர் களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 25-ந் தேதி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஒட்டன்சத்திரம் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வார விடுமுறை அளிக்கப்படும் நிலையில் வரும் 25-ந் தேதி விடுமுறை என்பதால் அன்று விவசாயிகள் யாரும் காய்கறிகள் கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LorryStrike #OddanchatramMarket
மதுரை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சி.சாத்தையா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் தொடங்குகிறது.
மதுரை மாநகரில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு பெற்ற சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
மதுரை நகரில் 230 தினசரி பார்சல் புக்கிங் செய்யும் அலுவலகங்கள் இன்றுடன் (18-ந்தேதி) புக்கிங்கை நிறுத்துகின்றன. 400-க்கும் மேற்பட்ட தேசிய உரிமம் பெற்ற லாரிகள் இன்றிலிருந்தே நிறுத்தி வருகிறோம்.
டீசல் விலை உயர்வை குறைத்து 3 மாதத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்திய 3-ம் நபர் காப்பீட்டு கட்டணத்தை வாபஸ் வாங்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்து வருடத்துக்கு ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தினால் போதும் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.
இ-வே பில் போன்ற நடைமுறை சிரமங்களை நீக்க வேண்டும். தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும். அல்லது ஜி.எஸ்.டி. முறைக்கு மாற்ற வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது. இதனால் மதுரையில் நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடிக்கு மேல்வர்த்தகம் பாதிக்கும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய - மாநில அரசுகளின் வரி வசூல் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும்.
மதுரை நகரத்திற்கு அன்றாடம் வரவேண்டிய காய்கறி, பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் வந்து சேராது. இதனால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது. வியாபாரிகளும், பொதுமக்களும் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க நடத்தும் எங்களது அறப்போராட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
எங்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கேட்டுக் கொள்கிறோம். இதுவரையில் சுமூக தீர்வுக்கான சூழ்நிலைகளை மத்திய அரசு தொடங்கவில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்